கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 May 2019 4:00 AM IST (Updated: 30 May 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்களுடன் உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.

ஜல்லிக்கட்டில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்கினர். முன்னதாக போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதலில் அய்யனார் கோவில் காளை யாரும் பிடிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மடக்கி பிடித்தனர்.

ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து கொண்டு இருந்தவர்கள் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியையொட்டி விழா குழுவினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story