இணைய தளத்தில் வெளியிடக்கோரி வழக்கு, தனியார் பள்ளி கல்விக்கட்டணம் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் - விசாரணையை ஒத்தி வைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளி கல்விக்கட்டண விவரங்களை தொடக்கத்திலேயே இணைய தளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணி முத்து, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டுப்பாடுகள் இன்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை ஏற்கனவே ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான கல்வி கட்டணக்குழு நிர்ணயம் செய்து வருகிறது. இந்த கல்விக் கட்டண விவரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கல்விக் கட்டண விவரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் அவரவர் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே இதுபோன்ற சூழ் நிலைகளை தடுக்க, தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக இணைய தளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். தனியார் பள்ளிகள் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, “தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அவர்களின் ஆண்டு வருமானத்தில் பெருமளவு தங்களின் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்துக்கு செலுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது“ என்று வாதாடினார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தார். விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story