நிலத்தடி நீர் திருட்டு; பொதுமக்கள் சாலைமறியல்


நிலத்தடி நீர் திருட்டு; பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 4:58 PM GMT)

பொன்னேரி அருகே நிலத்தடி நீர் திருடி விற்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்குன்றம்,

பொன்னேரியை அடுத்த பூதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்குமேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை திருடி விற்று வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், சோழவரம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2 முறை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மின் இணைப்பை துண்டித்து ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது.

இருப்பினும் அந்த பகுதியில் நிலத்தடி நீர் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிலத்தடி நீர் திருட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொக்குமேடு கிராமத்தை அடுத்த மாரம்பேடு கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 37) என்பவரை போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என்பதை தெரிந்த போலீசார் சரவணனை விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை நிலத்தடி நீர் திருடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மாரம்பேடு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், வடிவேல் முருகன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் அரசு அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் திருடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட அரசு பஸ் விடுவிக்கப்பட்டது.

Next Story