பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனச்சரகர் மீது புகார்: 2 மகன்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனச்சரகர் மீது புகார்: 2 மகன்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 31 May 2019 4:45 AM IST (Updated: 30 May 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2 மகன்களுடன் தாய் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்வது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பத்தினர் நேற்று காலை தீக்குளிக்க வருவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் (பொறுப்பு) தலைமையில், சத்துவாச்சாரி போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை தீவிர சோதனை செய்து உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இந்த நிலையில் பகல் 1 மணி அளவில் ஒரு பெண் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், எனது தங்கையை தேடி வந்ததாக தெரிவித்தார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட நேரத்தில் போர்டிகோ அருகில் வந்த அந்த பெண்ணின் தங்கை திடீரென அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து தலையில் ஊற்ற முயன்றார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து தீப்பெட்டியை பிடிங்கினர். அடுத்த நிமிடமே அருகில் நின்றிருந்த 2 சிறுவர்கள் கையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து மண்எண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டனர். அவர்கள் இருவரும் தீப்பெட்டியை எடுத்து தீபற்ற வைக்க முயன்றனர்.

இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ஓடிச்சென்று பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் தீப்பெட்டியை பிடுங்க முயன்றனர். எனினும் இருவரும் கைக்குள் இறுக்கமாக தீப்பெட்டியை பிடித்துக் கொண்டனர். போலீசார் கட்டிப்புரண்டு அவர்களிடம் இருந்து தீப்பெட்டியை பிடுங்கினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் கொண்டு வந்து அவர்கள் மேல் ஊற்றி அவர்களை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர்களை போலீசார் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் விசாரணையில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட பெண் அமிர்தியில் வனச்சரகராக பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ராஜா என்பவருடைய மனைவி மெர்லின் மாலதி என்பதும், அந்த சிறுவர்கள் மெர்லின்மாலதியின் மகன்களான சச்சின் (வயது 18), நெல்சன் (15) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மெர்லின் மாலதி ஆற்காடு தாலுகா புங்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கும் ராஜாவுக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்து ராஜா, மெர்லின் மாலதியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே ராஜா புங்கனூரை சேர்ந்த ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மெர்லின்மாலதி கேட்டதற்கு ராஜா மிரட்டி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவர், இதே கோரிக்கைக்காக சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story