சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோளிங்கர்,
சோளிங்கர் ஒன்றியம் பாண்டியநல்லூர் ஊராட்சியில் உள்ள பாணாவரம் ரோடு, காமதேனு நகர் மற்றும் ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளுக்கு சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏற்கனவே 3 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் 4-வது முறையாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சோளிங்கர்-பாணாவரம் கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், குடிநீர் இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து சோளிங்கர் ஒன்றிய அலுவலகத்திலும், பாண்டியநல்லூர் ஊராட்சி செயலாளர் லட்சுமணனிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும். மேலும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
சாலை மறியல் நடந்த இடத்திற்கு காலை 7.30 மணி வரை அதிகாரிகளும், போலீசாரும் வரவில்லை. இதனையடுத்து 8 மணி அளவில் கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், சோளிங்கர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story