தேசூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தேசூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
சேத்துப்பட்டு,
தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செய்யாறு கூட்டு குடிநீர் கடந்த 4 மாதமாக வரவில்லை. ஆனால் பேரூராட்சி சார்பில் நல்லத்தண்ணீர் குளம், கார்புகா தோப்பு, கல்யாணபுரம் ஆகிய பகுதியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்து வந்தனர்.
இந்த தண்ணீர் உப்பு மற்றும் துவர்ப்பு கொண்ட தண்ணீராக இருப்பதால் குடிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென காலி குடங்ளுடன் தேசூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் செயல் அலுவலர் (பொறுப்பு) கோபிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு செய்யாறு கூட்டு குடிநீர் தான் வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
இதையடுத்து செய்யாறு கூட்டு குடிநீர் வாரிய செயற் பொறியாளர் பாஸ்கரன் தேசூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பெதுமக்களிடம் பேசுகையில், செய்யாறு ஆற்றின் கிணற்றில் தண்ணீர் எந்த அளவிற்கு வேகமாக வருகிறதோ அதன் அடிப்படையில் பைப்லைன் அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story