நல்லம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி


நல்லம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியாகினர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் சிவா. தொழிலாளி. இவருடைய மகன் கோகுல் (வயது 6). இவன் நல்லம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சேலம் மாவட்டம் சீரகாப்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கார்த்திகா(10). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து தற்போது 6-ம் வகுப்பு செல்ல இருந்தாள்.

இந்தநிலையில் பள்ளி விடுமுறைக்காக கார்த்திகா நல்லம்பள்ளி வன்னியர் தெருவில் உள்ள அவரது பாட்டி பாக்கியம் வீட்டுக்கு சென்றாள். நேற்று பாக்கியம் ஆடுகளை மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் உள்ள கோபாலபுரம் ஏரிக்கு ஓட்டி சென்றார். இதனால் சிறுவன் கோகுலும், சிறுமி கார்த்திகாவும் பாக்கியத்துடன் சென்றனர். பின்னர் சிறுவனும், சிறுமியும், குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியம் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று குட்டையில் தேடினர். அப்போது சிறுவன் கோகுலும், சிறுமி கார்த்திகாவும் குட்டையில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த கோகுலின் குடும்பத்தினர், உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி விளையாடியபோது கோகுலும், கார்த்திகாவும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குட்டையில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story