கொள்ளிடம் அருகே விஷம் குடித்த பெண் சாவு கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


கொள்ளிடம் அருகே விஷம் குடித்த பெண் சாவு கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 30 May 2019 6:42 PM GMT)

கொள்ளிடம் அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் கணவர் உள்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்ததாக கூறி திவ்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 36). இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சரவணகுமார், மனைவி திவ்யாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வயலுக்கு பயன்படுத்த கூடிய பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திவ்யாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யாவின் கணவர் சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திவ்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று திவ்யாவின் தந்தை ராஜேந்திரன் (58) என்பவர் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மகளின் கணவர் சரவணகுமார், மாமியார் பானுமதி, நாத்தனார் சிவகாமி மற்றும் அவரது கணவர் பழனிசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து திவ்யாவின் வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே திவ்யா கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் கொள்ளிடம் போலீஸ் நிலையம் எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உரிய விசாரணை நடத்தி திவ்யாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story