ராயக்கோட்டை அருகே பூசாரி வீட்டில் கொள்ளை; 3 பேர் கைது


ராயக்கோட்டை அருகே பூசாரி வீட்டில் கொள்ளை; 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 31 May 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே பூசாரி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது நாகமங்கலம் ஊராட்சி. இங்குள்ள யு.புரத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி (வயது 42). இவர் ராயக்கோட்டை அருகே உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக உள்ளார். மேலும் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தனது குடும்பத்துடன் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் ஓசூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் மனைவி சுமதி மற்றும் 4 வயது மகளுடன் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 2 பேர் அவரது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் லாரி பழுதாகி உள்ளதாகவும், அதனால் தாங்கள் அங்கு வந்ததாகவும், கூறி குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து வீட்டில் இருந்த கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் மனைவி சுமதி தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றார்.

அந்த நேரம் வீட்டிற்குள் ‘‘திபுதிபு’’வென்று மேலும் 6 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ.80 ஆயிரம், 3½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கிரு‌‌ஷ்ணமூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

இந்த கொள்ளை குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையிலான தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராகவன் (கெலமங்கலம்), மகாலிங்கம் (ராயக்கோட்டை) மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் அடையாளம் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்டதாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஆலமரத்துப்பட்டி பூவன்னிய நகரை சேர்ந்த சபரிநாதன் (30), நல்லம்பள்ளி பு.செட்டிஅள்ளி சேட்டு (25), ராயக்கோட்டை அருகே உள்ள எச்சம்பட்டி கண்ணப்பன் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 15 கிராம் நகைகள் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story