தொப்பூரில் கடைக்குள் லாரி புகுந்தது: டிரைவர் உடல் நசுங்கி பலி


தொப்பூரில் கடைக்குள் லாரி புகுந்தது: டிரைவர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 31 May 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூரில் கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உடல் நசுங்கி பலியானார். மற்றொரு டிரைவர் படுகாயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி,

குஜராத் மாநிலத்தில் இருந்து சீரகம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் ஒரு லாரி மதுரைக்கு புறப்பட்டது. இந்த லாரியை கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த ஞானசண்முகம் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்த பழனி (35) என்பவர் உடன் வந்தார்.

இந்த லாரி நேற்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தது. லாரியை மாற்று டிரைவர் பழனி ஓட்டி வந்தார். தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென பிரேக் உடைந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த ஒரு செல்போன் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பழனி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

மேலும் மற்றொரு டிரைவர் ஞானசண்முகம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர், சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story