திருச்செங்கோட்டில் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு


திருச்செங்கோட்டில் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 31 May 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்கப்பட்டது.

திருச்செங்கோடு, 

திருச்செங்கோடு - ஈரோடு மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை, பெரிய தெப்பக்குளம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் காலை 6 மணியளவில் பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தபோது சாக்கடைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன அழகான பெண் குழந்தை அழுது கொண்டு கிடந்தது.

இதுகுறித்து உடனடியாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாக்கடையில் கிடந்த அந்த பெண் குழந்தையின் உடலில் பிரசவித்த தாயின் ரத்தக்கறை இருந்ததால் குழந்தையின் கண் பகுதியில் எறும்புகள் மொய்த்து கடித்ததில் சிறிய காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்கும் டாக்டர்கள் சிகிச்ைச அளித்தனர்.

தொடர்ந்து இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் திருச்செங்கோடு வந்து குழந்தையின் உடலை பரிசோதித்து, விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் பிரசவித்த சில மணி நேரத்தில் அந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்று உள்ளார் என்பதும், அவர் எந்த ஊர், எதற்காக இப்படி வீசி சென்றார் என்பதும் தெரியவில்லை.


இதையடுத்து திருச்செங்கோடு பெருமாம்பாளையத்தில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் இயங்கி வரும் குழந்தைகள் சிறப்பு தத்து மையமான பராமரிக்கும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாக பீட்டர் செல்வராஜியிடம் அந்த பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

இக்குழந்தையை பற்றி விவரம் அறிந்தவர்களோ அல்லது அதன் உறவினர்கள் யாராவது இருந்தாலோ நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story