முத்துநாயக்கன்பட்டி அருகே தபால் நிலைய பெண் அதிகாரியிடம் 7 பவுன் நகை பறிப்பு
முத்துநாயக்கன்பட்டி அருகே தபால் நிலைய பெண் அதிகாரியிடம் 7 பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்து பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓமலூர்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 36). ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு மொபட்டில் வந்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை பணி முடித்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். முத்துநாயக்கன்பட்டி மல்லகவுண்டனூர் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பின்தொடர்ந்து வந்த 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி சாந்தி ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு பணிக்கு சென்ற நர்சிடம் ஹெல்மெட் போட்டு கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இதுபோல் ஓமலூர் பகுதியில் வழிப்பறி சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story