தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் வசந்தகுமார் எம்.பி. பேட்டி


தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் வசந்தகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 31 May 2019 3:15 AM IST (Updated: 31 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.

நெல்லை, 

தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிநீர் இணைப்பு திட்ட பணிகள்

நான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், எனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனினும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எனது சமுதாய பணிகள் தொடரும்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வறண்டு விட்டன. குறிப்பாக பாபநாசம் அணை வறண்டதால், அங்கு மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த கோடை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் தூர்வாரி, மதகுகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் குரல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை நலிவடைந்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றிய பெண்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 சதவீதம் மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். எனினும் கட்சியின் மாநில தலைமை மற்றும் அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அங்கு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டால், அந்த வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story