மாணவர்கள் வழிமாறி செல்வதை பெற்றோர் தடுக்கவேண்டும் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் அறிவுரை
மாணவர்கள் வழிமாறி செல்வதை தடுக்க பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும் என்று நல்லுறவு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.
வில்லியனூர்,
புதுவை மாநிலத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களில் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகள் அதிகம் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறு வயதில் தடம் மாறி செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டங்கள் போலீஸ் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் பழனிவேலு தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கதிரேசன் மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாணவர்கள் சமூக விரோத செயலில் ஈடுபடாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு பேசியதாவது:-
இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதை தடுப்பது சமுதாயத்தின் கடமையாகும். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், அது குறித்து பெற்றோர் விசாரித்து, அறிவுரை கூற வேண்டும். இதனால் மாணவர்கள் சமூகவிரோத செயல்களுக்கு தடம் மாறி செல்வதை தொடக்கத்திலேயே தடுக்க முடியும்.
கிராமப்புறங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானால் உடனே போலீசாருக்கு தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் பிரச்சினை ஏற்படுவது முன்கூட்டியே தடுக்கப்படும். குடியிருப்பு பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையில் போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. பூரணாங்குப்பம், எடையார்பாளையம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், போதை பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும், புதுச்சேரி- கடலூர் சாலையில் பூரணாங்குப்பத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது குற்றங்களை தடுக்க அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம், பூரணாங்குப்பம் ஆகிய கிராமங்களில் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story