உள்ளாட்சி தேர்தலுக்காக 4,156 வாக்குச்சாவடிகள் அமைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்


உள்ளாட்சி தேர்தலுக்காக 4,156 வாக்குச்சாவடிகள் அமைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 4,156 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் வாரியாக வாக்காளர் பட்டியல் இணையதளம் மூலம் தயாரித்தல் தொடர்பாக உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து அந்த வார்டுகளுக்கான வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் ேமற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது.அந்த வகையில் இந்தாண்டு (2019) இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஊரகப் பகுதியில் 2,731 வாக்குச்சாவடிகளும், மாநகராட்சி பகுதியில் 654 வாக்குச்சாவடிகளும், ஆத்தூர் நகராட்சியில் 63 வாக்குச்சாவடிகளும், மேட்டூர் நகராட்சியில் 54 வாக்குச்சாவடிகளும், எடப்பாடி நகராட்சியில் 58 வாக்குச்சாவடிகளும், நரசிங்கபுரம் நகராட்சியில் 24 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 572 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 156 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் இணையதளம் வாயிலாக தயார் செய்தல் தொடர்பாக முதன்மை பயிற்றுனர்களுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுனர்களால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் உதவி இயக்குனர் நிலையிலான தொகுதி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் உதவியாளர்கள், கணினி உதவியாளர்கள் ஆகியோருக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் இணையதளம் மூலம் தயார் செய்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களும் வாக்காளர் பட்டியலை எவ்வித தவறுகள் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story