ஆத்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
ஆத்தூர்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் ஒரு மகளும், 1½ வயதில் ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் கேரளாவில் தங்கியிருந்து குழந்தைகளுக்கான பனியன், ஜட்டிகள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். மஞ்சுளா குழந்தைகளை கவனித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மஞ்சுளா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) முருகேசன் மற்றும் போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் இருந்து மஞ்சுளாவின் பெற்றோர் மகாலிங்கம்-பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு இரவு 9 மணியளவில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது மஞ்சுளாவின் பெற்றோர் கூறும்போது, மகள் மஞ்சுளாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் விசாரித்தனர். எனவே மகளை கொடுமைப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story