பெருமாநல்லூர் உள்பட, 10 ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
பெருமாநல்லூர் உள்பட 10 ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
பெருமாநல்லூர்,
திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பட்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், காவிலிபாளையம், சொக்கனூர், தொரவலூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கும், 2-ம் மற்றும் 3-ம் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு திருப்பூர் 2-ம் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் வழங்க வேண்டிய குடிநீரில் நிர்ணயிக்கப்பட்டதில் பாதியளவு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த ஊராட்சியில் தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த ஊராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீரை முழுமையாக வழங்காமலும், மூன்றாவது திட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற மாநகராட்சி உள்ளிட்ட பிறபகுதிகளுக்கே மீண்டும் இரண்டாவது திட்ட குடிநீர் கூடுதலாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ஊராட்சிக்கு தினமும் 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோல பெருமாநல்லூருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டரும், காளிபாளையத்துக்கு 20 ஆயிரம் லிட்டரும், பொங்குபாளையத்துக்கு 50 ஆயிரம் லிட்டரும் வழங்கப்படுகிறது.
ஆனால் தற்போது இந்த 10 ஊராட்சிகளிலும் மக்கள் தொகை பெருகிய காரணத்தால் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. மேலும் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை, குழாய் உடைப்பு ஆகிய காரணங்களால் மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீரை வழங்குவதேயில்லை. இந்நிலையில், பெருமாநல்லூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் குடிநீரை முறையாக வழங்குவதில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக, நிர்ணயிக்கப்பட அளவிற்கு குடி குடிநீரை வழங்கினாலும், வழங்காவிட்டாலும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஊராட்சிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட முழுக்கட்டணத்தையும் வசூலிப்பதாகவும், மேலும் பிரதான குழாயில் இருந்து முறையற்ற குடிநீர் இணைப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. குடிநீர் வடிகால் அதிகாரிகள் சீரான குடிநீரை வழங்காததால் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். மேலும் குடிநீர் வடிகால் வாரியம் பாரபட்சம் இல்லாமல் குடிநீரை வழங்க வேண்டும் என அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்களின் சார்பில் கோவை பராமரிப்பு கோட்டம் (சிறுவாணி) நிர்வாகப்பொறியாளருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.
ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story