வனப்பகுதியின் சாலையோரங்களில், பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு


வனப்பகுதியின் சாலையோரங்களில், பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 30 May 2019 10:30 PM GMT (Updated: 31 May 2019 12:14 AM GMT)

ஊட்டியில் வனப்பகுதியின் சாலையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனை அனுபவிக்கவும், கோடை விடுமுறையை களிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த அல்லது வாடகை வாகனங்களில் அதிகளவில் வந்து கொண்டு இருக்கின்றனர். வாகனங்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி விட்டு, தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். பின்னர் அவர்கள் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், பொருட்களை சாலையோரத்தில் தூக்கி வீசி செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது, பிளாஸ்டிக் இல்லா நீலகிரி உங்களை வரவேற்கிறது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சாலையோரங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதோடு, அதனை பயன்படுத்தி விட்டு வீசி செல்வது தொடர் கதையாக உள்ளது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் சாலையோரம் கியாஸ் சிலிண்டர் மூலம் சமையல் செய்து வருகின்றனர். உணவு வகைகளை வனப்பகுதியையொட்டி சமைப்பதாலும், கழிவுகளை வீசுவதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைசிகரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பி வழிவதால், கோத்தகிரி சாலையோரத்தில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அங்கு வாகனங்களில் அமர்ந்தவாறு சுற்றுலா பயணிகள் சாப்பிட்ட பின்னர், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் போடுகிறார்கள். இதனால் சாலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. அதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தொட்டபெட்டா பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால், மண்ணின் வளம் கெட்டு போகிறது. மேலும் வனவிலங்குகள் அதனை உண்பதால், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது, சாலையோரம் மற்றும் வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story