குன்னூர் அருகே, சிறுத்தைப்புலி தாக்கி ஆடு சாவு - மேலும் 3 ஆடுகளை கவ்வி சென்றது
குன்னூர் அருகே சிறுத்தைப்புலி தாக்கி ஆடு இறந்தது. மேலும் 3 ஆடுகளை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ளது எமகுண்டு. இதனருகில் தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் எமகுண்டு பகுதியில் வசித்து வருபவர் ராஜா(வயது 42). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். ராஜா நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே ராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் ஒரு ஆடு இறந்து கிடந்தது. மேலும் அதனருகில் மற்றொரு ஆடு உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. மேலும் 3 ஆடுகளை காணவில்லை.
இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் சசிதரன், வனக்காப்பாளர் விக்ரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்வையிட்டனர். அப்போது சிறுத்தைப்புலி தாக்கி ஆடு உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, படுகாயம் அடைந்த ஆட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி புகுந்து ஆடுகளை தாக்கி உள்ளது. இதில் ஒரு ஆடு இறந்து விட்டது. மற்றொரு ஆடு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது. மற்ற 3 ஆடுகளையும் சிறுத்தைப்புலி கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றிருக்கலாம். சிறுத்தைப்புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி புகுந்து ஆடுகளை தாக்கிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story