கடமலைக்குண்டு அருகே சோலைத்தேவன்பட்டிக்கு டேங்கர் லாரி மூலம் தினமும் குடிநீர் வினியோகம் - கலெக்டர் உத்தரவு


கடமலைக்குண்டு அருகே சோலைத்தேவன்பட்டிக்கு டேங்கர் லாரி மூலம் தினமும் குடிநீர் வினியோகம் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 31 May 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே உள்ள சோலைத்தேவன்பட்டி கிராம மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மந்திசுனை மூலக்கடை ஊராட்சி, சோலைத்தேவன்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை பணி, சிறப்பாறை-பாறைக்குளம் பகுதிக்காக ரூ.41 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கீழ்நிலை குடிநீர் தொட்டி மற்றும் குழாய் பதிக்கும் பணி, யானைகஜம் மூங்கில் ஆற்றில் தலா ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக 2 இடங்களில் கட்டப்பட உள்ள தடுப்பணைகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விரைவில் அந்த திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வின்போது சோலைத்தேவன்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த கிராமத்துக்கான குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் வரை குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் தினமும் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story