காரியாபட்டி பகுதியில், ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை


காரியாபட்டி பகுதியில், ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 31 May 2019 12:14 AM GMT)

காரியாபட்டி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

காரியாபட்டி,

பருவமழை தொடர்ந்து பொய்த்துப்போனதால் மாவட்டத்தின் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. காரியாபட்டியில் பாண்டியன் நகர், என்.ஜி. ஓ.நகர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் முற்றிலுமாக தண்ணீர் இல்லை. இதனால் பொதுமக்கள் டிராக்டரில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 25 நாட்களுக்கு ஒரு முறை தான் இந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர்நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக கரிசல்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கரிசல்குளம் கண்மாய் நிரம்பினால் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

மேலும் அல்லாளப்பேரி கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் பல ஆண்டு காலமாக கண்மாய் நிரம்பாமல் விவசாயம் பொய்த்துப்போய்விட்டது.

எனவே அல்லாளப்பேரி கண்மாய்வரத்து கால்வாயை பொதுப்பணி துறை நிர்வாகம் பார்வையிட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story