மதுரை அருகே விபத்து, ஒரே நூற்பாலைக்குரிய 2 பஸ்கள் மோதி 30 பெண்கள் படுகாயம் - வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
நேற்றிரவு ஒரே நூற்பாலைக்குரிய 2 பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவற்றில் பயணம் செய்த பெண்கள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலூர்,
சிவகங்கை மாவட்டம் அரசனூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த நூற்பாலையில் பணியாற்றும் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி, கீழவளவு, மேலூர், வல்லாளபட்டி, புலிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் 2 பஸ்களில் நேற்றிரவு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். 2 பஸ்களிலும் தலா 30 பெண்கள் பயணம் செய்தனர். அந்த பஸ்கள் மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் ரோட்டில் சென்றுகொண்டிருந்தன.
கட்டயம்பட்டி என்ற இடத்தில் அந்த பஸ்கள் சென்ற போது ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. மேலும் அந்த பஸ்கள் அடுத்தடுத்து சாலையோரத்தில் கவிழ்ந்தன. இதில் அந்த பஸ்களில் வந்த அம்சத் பேகம், ஜெயலட்சுமி, பார்கவி, ராஜேஸ்வரி உள்பட 30 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, விபத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். காயமடைந்த பெண்கள் உடனடியாக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில பெண்கள் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்களை ஓட்டிச் சென்ற டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story