சிவகாசி அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்து, 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியில் சிவகாசியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பட்டாசு ஆலை வைத்துள்ளார். நாக்பூர் அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த ஆலையில் 70 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கிறார்கள்.
வழக்கமாக காலை 8.30 மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள். ஆனால் நேற்று காலை துலுக்கன்குறிச்சியை சேர்ந்த முருகேசன்(வயது57), அம்மையார்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ்(58) ஆகியோர் முன்னதாகவே வேலைக்கு வந்துள்ளனர்.
தொழிலாளர்கள் 2 பேரும் 69-வது அறைக்கு சென்று பட்டாசு தயாரிப்புக்கான மருந்தை கலக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி அளவில் எதிர்பாராதவகையில் மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் தொழிலாளர்கள் 2 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த அறையும் நொறுங்கியது. பிற தொழிலாளர்கள் வேலைக்கு வரும் முன்பாகவே இந்த துயர சம்பவம் நடந்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா ஆகியோரது தலைமையில் வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அடையாளம் காண முடியாத வகையில் சிதறிய உடல் பாகங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வெடி விபத்து சத்தம் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டதால் அக்கம்பக்கத்து கிராமத்தினர் அங்கு திரண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜ் குமார், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், செல்லப்பாண்டி, வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக ஆலை மேலாளரான நெல்லை மாவட்டம் கரடிகுளத்தை சேர்ந்த சந்திரன் (54), மேற்பார்வை யாளரான சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த விஜயகுமார் (40) மற்றும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த போர்மென் சங்கர்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை அதிபர் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த முருகேசனுக்கு குருவம்மாள் என்ற மனைவியும் 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். சுந்தர்ராஜுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், 2 பேர் பலியானதற்கு அனுதாபம் தெரிவித்திருப்பதோடு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story