ஊத்தங்கரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்
ஊத்தங்கரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. சம்பவத்தன்று இவள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருள் வாங்க சென்றாள். அப்போது பழையூர் பக்கமுள்ள சென்னப்ப நாயக்கனூரை சேர்ந்த தீனா (வயது 21) என்பவர், சிறுமியை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
பின்னர் அவர் சிறுமியை கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து தீனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளாள். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தீனா மீது கடத்தல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.
சென்னையை சேர்ந்தவள் 9 வயது சிறுமி. இவள் விடுமுறையை முன்னிட்டு கல்லாவி அருகே உள்ள சாலமரத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று சிறுமி தனது தோழிகளுடன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது சாலமரத்துப்பட்டியை சேர்ந்த சண்முகம் (35) என்ற கூலித்தொழிலாளி அங்கு வந்தார். பின்னர் அவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்று அவளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து சிறுமியின் உறவினர் கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் விசாரித்து சண்முகம் மீது போக்சோ பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story