ராமேசுவரத்தில் விசைப்படகுகளை மீன்துறை அதிகாரிகள் குழு ஆய்வு
ராமேசுவரத்தில் மீன்துறை அதிகாரிகள் குழு விசைப்படகுகளை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி தொடங்கியது. இதையடுத்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தடை காலம் வருகிற ஜூன் மாதம் 14–ந் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் பகுதிகளில் கரையில் ஏற்றி வைக்கப்பட்டு மராமத்து பணிகள் செய்யப்பட்ட படகுகளை கடலில் இறக்கி வைக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 61 நாள் தடை காலம் முடிந்து வருகிற ஜூன் மாதம் 15–ந் தேதி காலை முதல் அனைத்து விசைப்படகுகளும் மீன் பிடிக்க செல்ல உள்ளதையொட்டி நேற்று ராமேசுவரம்,பாம்பன் பகுதிகளில் உள்ள அனைத்து விசைப்படகு களையும் மீன்துறை அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம், பாம்பனில் 23 குழுக்கள் கொண்ட மீன்துறை அதிகாரிகள் குழுவினர் மொத்தம் 69 பேர் ராமேசுவரம்,பாம்பன் பகுதிகளில் உள்ள 875 விசைப் படகுகளையும் பார்வையிட்டு படகின் ஆர்.சி.புத்தகம், படகின் அளவு,உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.படகில் பதிவு எண் சரியாக எழுதுப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
இது பற்றி ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் யுவராஜ் கூறியதாவது:– விசைப்படகுகளுக்கான 61 நாள் மீன் பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 14–ந் தேதி இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. தடைகாலம் முடிந்து வருகிற 15–ந் தேதி காலை 6மணியில் இருந்து மீன்பிடி டோக்கன் பெற்று அனைத்து விசைப் படகுகளும் மீன் பிடிக்க செல்ல வேண்டும்.தடைகாலம் முடிவடைய உள்ளதையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள 875 விசைப் படகுகளை 69 பேர் அடங்கிய மீன்துறை அதிகாரிகள் குழு முழுமையாக ஆய்வு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.