சீனியப்பா தர்கா பகுதியில் பலத்த காற்றால் கடலில் படகு கவிழ்ந்து சேதம்
மண்டபம் யூனியன் சீனியப்பா தர்கா பகுதியில் பலத்த காற்று காரணமாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கவிழ்ந்து சேதமடைந்தது.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்டது சீனியப்பா தர்கா கிராமம். இங்கு அதிக அளவில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். 25–க்கும் மேற்பட்ட மீனவர்கள் சொந்தமாக படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளையும் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர். இந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.
இந்த நிலையில் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான படகு காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. நேற்று காலை வழக்கம்போல படகு உரிமையாளர் கோவிந்தன் கடற்கரைக்கு சென்று பார்த்த போது படகு தண்ணீரில் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சக மீனவர்கள் உதவியுடன் படகை கடலில் இருந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் அந்த படகின் பலகைகள் உடைந்து சேதமடைந்திருந்ததால் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனவர் கோவிந்தன் கூறும்போது, ரூ.1 லட்சம் கடன் பெற்று படகு வாங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தேன். பலத்த காற்றினால் எனது படகு கடலில் மூழ்கியதுடன் பலகைகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை. மேலும் எங்களது வாழ்வாதாரத்துக்கும் வேறு வழியில்லை. எனவே தமிழக அரசும், மீன் வளத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த எனது படகுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.