உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் பணி இன்று தொடக்கம்


உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் பணி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசின் இழப்பீடு தொகை வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

ராமநாதபுரம்,

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரூ.12,665 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த அனல் மின் நிலையத்திற்காக 995 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கண் டறியப்பட்டது. இவற்றில் 768 ஏக்கர் பட்டா நிலமாகவும், 227 ஏக்கர் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது.

பட்டா நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் 350 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்கள் இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மீதம் உள்ள 418 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.17 கோடி மின் வாரியத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என்று நில நிர்வாக ஆணையம் தற்போது உத்தரவு வழங்கி உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிர்ணய உத்தரவு கடிதம் அனுப்பும் பணி முடிவடைந்து இழப்பீடு வழங்கும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

இதனையொட்டி இழப்பீடு நிர்ணய உத்தரவு கடிதத்துடன் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களின் நிலம் தொடர்பான உரிய அசல் ஆவணங்களுடன் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நேரில் வந்தால் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வங்கி கணக்கில் இழப்பீடு வரவு வைக்கப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.17 கோடி தொகை நில எடுப்பு தாசில்தார் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையில் இருந்து 418 ஏக்கர் நிலத்தின் 222 உரிமையாளர்களுக்கு இழப்பீடு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

இதனிடையே உப்பூர் அனல்மின் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து திட்டங்களுக்கான நில எடுப்பு தொடர்பான வழக்குகளையும் ஒன்றாக இணைத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதன்பின்னர் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ள 350 ஏக்கர் நிலங்களின் 181 பேருக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த தகவலை உப்பூர் அனல் மின் நிலைய திட்ட அதிகாரி தெரிவித்தார்.


Next Story