மேலச்செல்வனூரில் தண்ணீர் இல்லாததால் வெறிச்சோடிய பறவைகள் சரணாலயம்
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கண்மாய் 593.08 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் உள்வாயில் பகுதியில் அடர்ந்த மரங்கள் உள்ளன. இவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டுவதில்லை. மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம்.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பறவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசுகள் கூட வெடிப்பதில்லை. தமிழக அரசு கடந்த 1998–ம் ஆண்டு இந்த கண்மாயை மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இந்த பறவைகள் சரணாலயத்தில் நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கூலைக்கடா, பாம்புதாரா, சிறிய நீர்க்காகம், பெரிய நீர்க்காகம், நெடுங்கால் உள்ளான், முக்குழிப்பான், சிறிய கொக்கு, பெரிய கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.
மேலச்செல்வனூர் கண்மாய்க்கு வைகையில் இருந்து கூத்தன் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் அருகில் உள்ள ஓடைகளில் இருந்தும், வயல்வெளிகளில் இருந்தும் தண்ணீர் வழிந்தோடி கண்மாயில் சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக காக்கூர், சடையனேரி மேலச்சிறுபோது, சித்துடையான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைகையில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கூத்தன் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 வருடங்களாக இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால் மழை தண்ணீரையும் சேமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் மழை பெய்தாலும் இக்கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய் மற்றும் ஓடைப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், மணல் கொள்ளையர்களால் சில இடங்களில் பள்ளம் உருவாகி உள்ளதாலும் மழைத்தண்ணீர் வரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 வருடங்களாக மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவை ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றன. இதனால் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. உள்ளூர் பறவைகளை மட்டுமே காணமுடிகிறது. எனவே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தை காப்பாற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வந்து சேரவும், கூத்தன் கால்வாய் வழியாக வைகை நீர் வந்தடையவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.