ஆண்டிப்பட்டி-ஏத்தகோவில் சாலையில், ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி


ஆண்டிப்பட்டி-ஏத்தகோவில் சாலையில், ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி-ஏத்தகோவில் சாலையில் மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மந்தமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதையை அகற்றி விட்டு, அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக ஆண்டிப்பட்டி பகுதியில் 7-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதில் அதிக வாகன போக்குவரத்து உள்ள ஆண்டிப்பட்டி-ஏத்தகோவில் சாலையின் குறுக்கே ரெயில்வே பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

அந்த பாதை சரிவர அமைக்கப்படாததால் குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த ரெயில்வே பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதேபோல சமத்துவபுரம் செல்லும் சாலையின் குறுக்கே பல மாதங்களாக ஆமை வேகத்தில் ரெயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே ரெயில்வே பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story