தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Jun 2019 4:45 AM IST (Updated: 1 Jun 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மீளாய்வுக் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக அரங்கில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர் மற்றும் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அலுவலர்களின் பணி முன்னேற்ற அறிக்கைகள், தேர்வு முடிவுகள் சார்ந்து முன்னேற்ற அறிக்கை, 2 முதல் 8-ம் வகுப்பு வரை அடைவுத் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-

அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினால் ஆரம்பக் கல்வி என்பது மாணவர்களுக்கு எளிதாக வழங்க முடியும். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவை சிறப்பாக பணியாற்றினால் தான் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். சரியாக பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இந்த மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும்.

எனவே அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பணியை திறம்பட செய்ய வேண்டும். வட்டார கல்வி அலுவலர்கள் காலை பள்ளி திறக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய முடியும். அனைத்து பள்ளிகளிலும் ‘எ’ மற்றும் ‘பி’ நிலையில் தான் மாணவர்கள் இருக்க வேண்டும். ‘சி’ மற்றும் ‘டி’ நிலையில் மாணவர்கள் இருக்கக் கூடாது. அதற்கான முயற்சிகளை அனைத்து அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story