நடப்பு கோடை சீசனில், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர்


நடப்பு கோடை சீசனில், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு கோடை சீசனில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளார்கள்.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி சிறந்த கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்கவும், பூங்காக்களில் பூத்து குலுங்கும் பல்வேறு வண்ண மலர்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தார்கள்.

நடப்பாண்டில் கோடை விழா கடந்த மே மாதம் 1-ந் தேதி கலைநிகழ்ச்சியுடன் ஊட்டியில் தொடங்கியது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், வர்க்கி, சாக்லேட் மற்றும் வெம்மை ஆடைகள் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வாங்குவதற்காக நைட் பஜார் தாவரவியல் பூங்காவில் செயல்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல், நடனம், கவிதை உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கோடை சீசனையொட்டி சேரிங்கிராசில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி கடந்த 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பழ கண்காட்சி நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக, போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்று பஸ்கள் இயக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், மே மாத தொடக்கத்தில் இருந்து கலைநிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 27-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பரதநாட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாரம்பரிய நடனம், பல்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது. நேற்றுடன் கோடை விழா கலைநிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

கோடை சீசனையொட்டி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்து உள்ளனர். கடந்த ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர் என்று தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். இதனை பார்க்கும் போது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தங்கும் விடுதிகளில் பலமடங்கு வாடகை உயர்வு, ஆட்டோ கட்டணம் உயர்வு, போக்குவரத்து நெரிசல் போன்றவை இருந்தும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story