திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி 3 மாதங்களில் நிறைவுபெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி 3 மாதங்களில் நிறைவுபெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி 3 மாதங்களில் நிறைவுபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

ஸ்ரீவைகுண்டம், 

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி 3 மாதங்களில் நிறைவுபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

வெள்ளையத்தேவன் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய மணிமண்டபத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, வெள்ளையத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பா.ஆதித்தனார்

நம் நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தான் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஏராளமான மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை எண்ணற்ற தியாக சீலர்கள் வாழ்ந்த இடம் ஆகும். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வல்லநாட்டில் வீரன் வெள்ளையத்தேவனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மந்திரிசபையில் பதவி குறித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் டெல்லியில் கலந்து ஆலோசித்துள்ளனர். டெல்லியில் இருந்து திரும்பி வந்தவுடன் நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

3 மாதங்களில் நிறைவு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 3 மாதங்களில் முழு பணிகளும் நிறைவுபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story