ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆறுமுகநேரி,
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அடிப்படை வசதிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது பேயன்விளை புதூர் கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வந்தது.
கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும் பேயன்விளையில் இருந்து பேயன்விளை புதூருக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மதியம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனே சீராக குடிநீர் வழங்கவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுவை வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story