சாட்சி சொன்னால் வெட்டுவேன் என்று வன்முறையை தூண்டும் விதமாக டிக்-டாக் வீடியோ; போலீசார் விசாரணை


சாட்சி சொன்னால் வெட்டுவேன் என்று வன்முறையை தூண்டும் விதமாக டிக்-டாக் வீடியோ; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 May 2019 11:15 PM GMT (Updated: 31 May 2019 7:27 PM GMT)

சாட்சி சொன்னால் வெட்டுவேன் என்று வன்முறையை தூண்டும் விதமாக டிக்-டாக் வீடியோவில் பதிவேற்றம் செய்த ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

மடத்துக்குளம்,

முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அது போல் டிக்-டாக் என்ற செயலியும் தற்போது மிகவும் பிரபலமாகி விட்டது. இதில் சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய பாடல்வரிகளை மையப்படுத்தி நடித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். டிக்-டாக் செயலியில் சிலர் அரிவாளை காண்பித்து வன்முறை தூண்டும் விதமாகவும், பலர் ஆபாசமாக நடித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இதனால் இந்த டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் டிக்-டாக் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் செயல்பட ஐகோர்ட்டு அனுமதித்தது. இந்த நிலையில் மடத்துக்குளம் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு 2 வாலிபர்கள் டிக்-டாக் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த டிக்-டாக் செயலியில் ஒரு வாலிபர் மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து தலை குனிந்தபடி வெளியே வருவது போலவும், அவரை பார்த்து மற்றொரு வாலிபர், கோர்ட்டில் வந்து சாட்சி சொன்னால் நுழைவு வாயிலில் வெட்டுவேன் என்ற பாடல் வரிகளை பாடுவதுபோலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த மடத்துக்குளம் போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்கள் யார்? அந்த வீடியோவில் வருபவர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள்.

Next Story