திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 15 அடியாக சரிந்தது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?


திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 15 அடியாக சரிந்தது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
x
தினத்தந்தி 1 Jun 2019 4:15 AM IST (Updated: 1 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 15 அடியாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

தளி,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி 3-ம் மண்டல பாசனத்திற்கு உரிய இடைவெளியில் நீர்வரத்து மற்றும் நீர்இருப்பினை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்இருப்பு சரிந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் கைகொடுத்து உதவியதால் காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அவ்வப்போது சரிவை சந்தித்தாலும் கால்வாய்களில் திறக்கப்பட்ட தண்ணீர் அடைக்கப்படும் போது மீண்டும் உயர்ந்து வந்தது.

கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள ஏராளமான அணைகள் நீர் இருப்பை இழந்து தவித்து வருகின்றன. வறட்சியின் தாக்குதலுக்கு அமராவதி அணை முழுவதுமாக சிக்கிக்கொண்டது. ஆனால் பி.ஏ.பி. அணைகளின் உதவியால் திருமூர்த்திஅணை மட்டும் தப்பித்துக்கொண்டது. 3-ம் மண்டல பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அணையில் நீர் இருப்பு 15 அடியாக சரிந்து விட்டது.

இன்னும் ஓரிரு நாட்களில் 3-ம் மண்டல பாசனம் நிறைவடைய உள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அணையில் உள்ள குறைவான நீர்இருப்பை கொண்டு குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யமுடியுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் குடிநீர் திட்டங்களை நீர்ஆதாரமாக கொண்டுள்ள சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு சரிந்தாலும் ஒருசில நாட்களில் உயர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே குடிநீர் திட்டங் களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்குவதில் எந்த விதமான தடங்கல்களும் ஏற்படாது. ஆனால் பொதுமக்கள் கோடைகாலம் முடியும் வரையும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை பெருமளவு குறைத்து விடலாம் என்று தெரிவித்தனர்.

திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 15.01 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 406 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு பி.ஏ.பி. பிரதான கால்வாய் மூலமாக 592 கனஅடி தண்ணீரும் குடிநீருக்காக 26 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story