உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன; 38 பேர் படுகாயம்
உசிலம்பட்டியை அடுத்த அய்யனார்குளத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 38 பேர் படுகாயமடைந்தனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அய்யனார்குளம். இந்த ஊரில் உள்ள கடசாரி நல்லகுரும்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 575 காளைகள் வந்திருந்தன. அதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன் இந்த ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.
இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கினாலும், சில காளைகள் வீரர்களை மிரட்டியதுடன் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து சென்றன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, குளிர்சதானபெட்டி, கட்டில், அண்டா, பானை, பட்டுச்சேலைகள், மின்விசிறி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய மாடுகளுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 12 மாடுகளை அடக்கிய தோடநேரியைச் சோந்த சுந்தரபாண்டி சிறந்த வீரராக தேர்வு பெற்று சிறப்பு பரிசை தட்டிச்சென்றார்.
இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை கொண்டு வந்த பெண் உள்பட 38 பேர் படுகாயமடைந்தனர். இதில் வெள்ளமலைப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சரவணன் (வயது 24) தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதேபோல குருவித்துறையில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் சீனிவாசன் மனைவி சுப்புலட்சுமி(22), உசிலம்பட்டியைச் சேர்ந்த கொடி (31), வருசநாட்டைச் சேர்ந்த தங்கப்பாண்டி(35), இ.கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (26), குறவகுடியைச் சேர்ந்த ஒச்சு (22) ஆகிய 5 பேரும் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தாலைமையில் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.