ஆசிரியர் தகுதி தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தல்


ஆசிரியர் தகுதி தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் பெரம்பலூர் மகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கோடை வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோடை வெப்பத்தின் அளவு 110 டிகிரியை கடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. கால்நடைகளை வளர்க்கும் தொழில் கடும் போராட்டமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் குடிநீர் மற்றும் புழங்குவதற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை வால் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் அவதி அடைந்துவருவதை ஊடகங்களில் காண முடிகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் போதிய அளவு நீர் ஆதாரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. இதனிடையே கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட் கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் போதிய நீர்ஆதாரம் உள்ளதா? என்பதனை உறுதி செய்திடவேண்டும்.

இந்த கடினமான சூழ்நிலையில் மாணவ -மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் நீர்ஆதாரத்தை தமிழக அரசு உறுதி செய்திடவேண்டும். கடும் கோடை வெப்பம், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story