சிங்கம்புணரியில் எல்லை பிரச்சினையால் சாலையில் 2 மணி நேரம் கிடந்த சடலம்
சிங்கம்புணரி அருகே எல்லை பிரச்சினையால் விபத்தில் சிக்கி இறந்தவரின் சடலம் சுமார் 2 மணி நேரம் சாலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் வேகத்தடை அமைக்க வலியுறுத்தினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே திண்டுக்கல்–காரைக்குடி சாலை அ.காளாப்பூர் பாலாற்று பாலம் அருகே கடந்த 29–ந்தேதி இரவு வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, எதிரே வந்த மணல் ஏற்றி வந்த லாரி மோதி அதே இடத்தில் பலியானார்.
தகவலறிந்து வந்த எஸ்.வி.மங்களம் போலீசார், விபத்து நடந்த இடம் பாலாற்று பாலத்திற்கு முன்பு என்பதால், அது சிங்கம்புணரி போலீசார் எல்லை என்று கூறினர். தொடர்ந்து நடந்த இந்த எல்லை பிரச்சினையால் விபத்தில் இறந்த வாலிபரின் சடலம் மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரமாக கேட்பாரற்று கிடந்தது.
அதன்பின்பு சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின்பு மீண்டும் விசாரணை நடத்தி, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வாலிபரின் உடல் எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், விபத்து நடந்து சுமார் 2 மணி நேரம் சடலத்தை எடுக்காமலும், அதிகாரிகள் யாரும் வராமலும் காலம் கடத்தினர்.
போக்குவரத்து அதிகமுள்ள திண்டுக்கல்–காரைக்குடி சாலையில் நடந்த விபத்தை யார் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என எஸ்.வி.மங்களம், சிங்கம்புணரி போலீசாரின் விவாதத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களே போக்குவரத்து போலீசாராக மாறி சாலையில் வாகனங்கள் சீராக செல்ல செயல்பட்டனர்.
எனவே சம்பந்தபட்ட போலீஸ் உயர்அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி போலீஸ்நிலைய எல்லை பகுதியை விளம்பர பலகையாக வைக்க வேண்டும். மேலும் இந்த பாலாற்று பகுதியின் இரு பகுதிகளிலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் உயிர்பலி ஆகிவிடுகிறது.
எனவே பாலத்தின் இருபகுதியிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். இரவில் ஒளிரும் விளக்குகள் பதிக்க வேண்டும். இவற்றை உடனடியாக செயல்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.