திருச்செந்தூரில் விபத்தை குறைப்பதற்கு நடவடிக்கை: ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்
திருச்செந்தூரில் விபத்தை குறைப்பதற்காக பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் விபத்தை குறைப்பதற்காக பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
புதிய முயற்சி
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் விபத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்தது. இதையடுத்து திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து விபத்தை குறைப்பதற்காக இன்று முதல் (சனிக்கிழமை) ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தால் பெட்ரோல் போடுவதில்லை என புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
பெட்ரோல் இலவசம்
இதுகுறித்து போலீசாரும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடந்த ஒரு வாரமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். மேலும், இந்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நேற்று திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட 13 பெட்ரோல் பங்க்கில் ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க்கில் நடந்த நிகழ்ச்சியை, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஹெல்மெட் அணியாததால் விபத்து ஏற்படும் போது பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதையடுத்து போலீசாரும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் இணைந்து ஹெல்மெட் அணியாமல் வரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் வாகனத்திற்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாளை (அதாவது இன்று) முதல் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டமாட்டாது. மேலும் ஒரு மாதகாலத்திற்கு ஒவ்வொரு பங்க்கிலும் ஒரு காவலர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குவார். விபத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் மேரிராணி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஹரிகிருஷ்ணன், சுதர்சன், ஹெச்.பி.சி.எல். தரக்கட்டுபாட்டு அதிகாரி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story