வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 19 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பணகுடி,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 19 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஜெயச்சந்திரன் (வயது 53). இவர் சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் வாங்கினார்.
இதில் ஆலங்குளத்தைச் சேர்ந்த மல்லிகாவின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவரிடம் இருந்து ஜார்ஜ் ஜெயச்சந்திரன் ரூ.1½ லட்சத்தை வாங்கினார். இதேபோன்று மேலும் 18 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஜார்ஜ் ஜெயச்சந்திரன் பணம் வாங்கினார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, மொத்தம் 19 பேரிடம் ரூ.50 லட்சத்தை பெற்று கொண்ட ஜார்ஜ் ஜெயச்சந்திரன், பின்னர் யாருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் ஏமாற்றினார்.
கைது
இதுகுறித்து மல்லிகா உள்ளிட்ட 19 பேரும், நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா உத்தரவின்பேரில், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜார்ஜ் ஜெயச்சந்திரனை தேடி வந்தார்.
இந்த நிலையில் வள்ளியூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜார்ஜ் ஜெயச்சந்திரனை பணகுடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story