விளைநிலங்களில் ராட்சத குழாய்களை பதித்தால் விவசாயிகளை திரட்டி போராட்டம்


விளைநிலங்களில் ராட்சத குழாய்களை பதித்தால் விவசாயிகளை திரட்டி போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் ராட்சத குழாய்களை பதித்தால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் தெரிவித்தார்.

பொறையாறு, 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, முடிகண்டநல்லூர், உமையாள்புரம், காளகஸ்தினாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர், மேமாத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணியின் போது சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் நெல், பருத்தி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிப்பதாக தெரிகிறது. இதை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குழாய்கள் பதிக்கப்பட்ட வயல்களில் தண்ணீரின்றி தற்போது பயிர்கள் வாடியுள்ளன. விளை நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர் ஆகிய கிராமங்களில் ராட்சத குழாய் பதிக்கப்பட்ட விளைநிலங்களை நேற்று தமிழ் பேரரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கெயில் நிறுவனத்தினர் விளைநிலங்களில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ராட்சத குழாய்களை பதித்து வருகின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. ஆந்திர மாநிலம் நகரி கிராமத்தில் கெயில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலியானார்கள்.

இதைப்போல இந்தியா முழுவதும் 50 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தால், அவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர். விளைநிலங்களில் ராட்சத குழாய்களை பதித்தால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திரைப்பட இயக்குனர் கவுதமன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகளின் விளை நிலங்களில் அத்துமீறி பொக்லின் எந்திரம் மூலம் பயிர்களை நாசம் செய்து கெயில் நிறுவனம் குழாய் பதித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கெயில் நிறுவனத்தின் மீதும், ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story