திருக்கனூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தற்கொலை; விலை உயர்ந்த ஆடை வாங்கித் தராததால் விரக்தி
திருக்கனூர் அருகே உறவினரின் திருமணத்துக்கு விலை உயர்ந்த ஆடை வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருக்கனூர்,
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன், தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது 19). வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சரண்யாவின் பெரியப்பா மகன் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு ஜவுளி வாங்க சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு விலை உயர்ந்த ஆடை வாங்கித் தரவேண்டும் என்று அவர் அடம்பிடித்தார்.
இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் தனக்கு விருப்பமான ஆடை வாங்கித்தராததால் சரண்யா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டின் மாடிக்கு சரண்யா சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மாடி அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இது தொடர்பாக காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.