சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 8 வழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
எனவே இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் குப்பனூர் பகுதி விவசாயிகள் நேற்று அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் நின்று கொண்டு கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
8 வழிச்சாலையை எதிர்த்தும், அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
8 வழிச்சாலை தொடர்பாக விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் உத்தமசோழபுரம் அருகே ஆத்துக்காடு சித்தனேரி என்ற இடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பூலாவரி, அக்ரஹாரம், உத்தமசோழபுரம், ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-
அரசு 8 வழிச்சாலை தொடர்பாக மேல்முறையீடுக்கு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும். முன்னாள் எம்.பி. அன்புமணி ராமதாஸ் 8 வழிச்சாலையால் விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அவர் இதனை தட்டிக்கேட்க வேண்டும். அரசு செவிசாய்க்கவில்லையெனில் கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
விவசாய நிலங்களை 8 வழிச்சாலைக்காக விட்டுக்கொடுக்க மாட்டோம். அதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தேர்தல் முடிந்ததும் 8 வழிச்சாலை தொடர்பான விஷயத்தில் அரசின் செயல்பாடு எதிர்மறையாக உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story