கோரிக்கைகளை வலியுறுத்தி, இ-சேவை, ஆதார் சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி, இ-சேவை, ஆதார் சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் இ-சேவை மைய பணியாளர்கள் யூனியன் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான வருமானம், சாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இ-சேவை மையத்திற்கு பேப்பர், அச்சு எந்திர டோனர் ஆகியவை சீராக அனுப்பி வைக்கப்படவில்லை. மேலும் இணையதள சேவையில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றார்கள். இதனால் ஏற்படும் தாமதத்திற்கு பொதுமக்களின் அதிருப்தியை ஊழியர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே இதனை சரி செய்ய அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முன்வர வேண்டும். மாறாக இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை மூடிவிடக்கூடாது.

நீண்ட காலமாக தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். சட்டவிரோதமாக பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணத்தை திரும்ப வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில், டாஸ்மாக் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க நிர்வாகி ராஜாமுகமது, போக்குவரத்து சங்க கரூர் கிளை தலைவர் பாலசுப்ரமணியன், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி தண்டபாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஊழியர்கள் போராட்டம் காரணமாக கரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் பணிகள் பாதிக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டம் குறித்த தகவல் தெரியாமல், நேற்று இ-சேவை மையங்களுக்கு பொதுமக்கள் வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்தனர். அவர்கள் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களில் ஊழியர்கள் வந்து விடுவர் என எண்ணி நீண்ட நேரமாக காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதில் கல்லூரியில் சேர விரும்பும் தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க பெற்றோர் பலர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story