மணமேல்குடி அருகே, நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
மணமேல்குடி அருகே நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப் பட்டனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில் மூர்த்தி, சுந்தர்ராஜ், பழனிசெல்வம், தொண்டிச்செல்வம் ஆகிய 4 பேரும் இறால் பிடிக்க நேற்று அதிகாலை புறப்பட்டு கடலுக்கு சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் இறால் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடலில் பலத்த காற்று வீசியது.
காற்றின் சுழற்சியால் திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த 4 மீனவர்களும், கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தபடி, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயகுரல் எழுப்பினர். அப்போது மீன்பிடித்து விட்டு அந்த வழியாக கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த நம்புதளை பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு, அவர்களது படகையும் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து பொன்னகரம் பகுதியை சேர்ந்த மீனவர் ரவிச்சந்திரன் கூறுகையில், எங்களது பொன்னகரம் மீன்பிடித்தளத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. நாங்கள் வானிலை அறிக்கையின்படியும், மீன்வளத்துறை அறிவிப்பின்படியும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். கடலில் அதிகமான காற்று வீசினால் அந்த தகவலை மீன்வளத்துறை எங்களுக்கு கூற வேண்டும். ஆனால் அவ்வாறு எங்களுக்கு கூறப்படுவது கிடையாது. இதனால் காற்று அதிகமாக வீசும் சமயங்களில் படகு கவிழ்ந்து மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் சம்பவம் நடக்கிறது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் அதிகமாக காற்று வீசுவதை, மீனவர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story