மாவட்ட செய்திகள்

சமயபுரம், துவரங்குறிச்சி, உப்பிலியபுரம் அருகே ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டி 52 பேர் காயம் + "||" + Samayapuram, Dowarankurichi, Uppiliyapuram Jallikattu, bulls and 52 injured

சமயபுரம், துவரங்குறிச்சி, உப்பிலியபுரம் அருகே ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டி 52 பேர் காயம்

சமயபுரம், துவரங்குறிச்சி, உப்பிலியபுரம் அருகே ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டி 52 பேர் காயம்
சமயபுரம், துவரங்குறிச்சி மற்றும் உப்பிலியபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் காளைகள் முட்டியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமய புரம் அருகே மேட்டு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி, வாடிவாசல் அமைக்கப்பட்டு அதன் இரண்டு பக்கங்களிலும் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லால்குடி ஆர்.டி.ஓ. பாலாஜி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளம் காளையர்கள் வீரத்துடன் அடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களின் பிடிக்குள் அகப்படாமல் தப்பி சென்றன.

இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு என்று பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று அந்த இடத்தில் கூடியதால் டிபன் கடை சிறு சிறு தள்ளுவண்டி கடை, மற்றும் ஐஸ்கிரீம் கடைகள் திடீரென்று தோன்றி மும்முரமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.

இதுபோல், துவரங்குறிச்சியை அடுத்த பழையபாளையத்தில் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மருங்காபுரி தாசில்தார் ரபீக் அகமது, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் 577 காளைகளும், 169 வீரர்களும் களம் கண்டனர். காளைகள் முட்டியதில் 11 மாடுபிடி வீரர்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இருவர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று தவறி விழுந்தது. இதையடுத்து அந்த காளையை துவரங்குறிச்சி தீயணைப்பு படையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகே பி.மேட்டூரில் மகாமாரியம்மன் கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முசிறி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர். துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் முன்னிலை வகித்தார். இதில் 393 காளைகள் கலந்து கொண்டன. 141 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். இதில் 16 பேர் காயம் அடைந்தனர். முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மொத்தம் 3 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் 52 பேர் காயம் அடைந்தனர்.