விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.1¾ லட்சம் ஒதுக்கீடு - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.1¾ லட்சம் ஒதுக்கீடு - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட பணிகள் (நெல் சாகுபடி) ரூ.79 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நெல் நேரடி விதைப்பு தொகுப்பு செயல் விளக்கம் 200 எக்டேரில் அமைத்திட ரூ.15 லட்சமும், 100 எக்டேரில் பயிர் சுழற்சி செயல் விளக்கம் அமைத்திட (முதல் பட்டத்தில் நெல், 2-ம் பட்டத்தில் பயறு) ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

முதல்பட்ட நெல்லுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம், 2-ம் பட்ட உளுந்துக்கு ரூ.5 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. செயல் விளக்கங்களுக்கு புதிய ரக நெல் விதை, நுண்சத்து, நுண்ணுயிர் உரம் போன்றவை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விதை நேர்த்தி செய்ய பொட்டாசியம் குளோரைடு, களைக்கொல்லி, வரப்பு பயிராக பயறு விதை, விதை விதைக்கும் கருவி வாடகை ஆகிய இனங்களில் உழவர்களுக்கு பின்னேற்பு மானியம் அவர்களது வங்கி கணக்கில் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக செலுத்தப்படும்.

10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட புதிய நெல் ரகங்களுக்கு (வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வினியோகம் செய்யப்படும் விதைகளுக்கு மட்டும்) ஒரு கிலோவிற்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட பழைய ரகங்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.10 மானியம் வழங்கப்படுகிறது. 800 எக்டேருக்கு நெல் நுண்சத்து 50 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.4 லட்சமும், 500 எக்டேருக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 500 எக்டேருக்கு களைக்கொல்லி 50 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 30 பம்பு செட்டுகள் ரூ.10 ஆயிரம் மானியத்தில் வழங்க ரூ.3 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பயிற்சி ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் தலா ஒரு பயிற்சி நடத்திட ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 390 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் துறை கள பணியாளர்கள் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகிப் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Next Story