ஈரோட்டில் சுற்றித்திரியும் 2 சக்கர வாகன திருடர்கள் , போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோட்டில் சுற்றித்திரியும் 2 சக்கர வாகன திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 2 சக்கர வாகன திருட்டு கும்பலின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. ஈரோடு நகரின் மையப்பகுதிகளிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை திருட்டு மற்றும் கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அந்த கேமராக்கள் நிலையாக அதே இடத்தில் தொடர்ந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதனால் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஈரோடு நகரில் பல பகுதிகளிலும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் சாலைகளின் மேல் பகுதியில் உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஈரோடு நகர் பகுதியில் எந்த வழியாக யார் சென்றாலும் அவர்கள் முழுமையான கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் தாண்டியும் 2 சக்கர வாகன திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ஈரோடு பிரப் ரோடு கலைமகள் பள்ளி அருகே வங்கியின் முன்னால், மேம்பாலத்தின் அடியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திச்சென்றார். வங்கிக்குள் சென்று திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுத்தாலும், அதை ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி போலீசார் தட்டிக்கழித்து விடுவதாக தெரிகிறது.
இதற்கு காரணம், போலீஸ் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை விசாரிக்கவும், திருடர்களை தேடிச்செல்லவும் போதிய போலீசார் இல்லாததே என்று போலீசார் தங்கள் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால், வாகனங்களை பறி கொடுத்தவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்ல, போலீஸ் துறையின் வழக்கு பதிவு மிக முக்கியமாக உள்ளது. இது தாமதப்படும்போது, திருட்டுப்போன வாகனங்களை தேடி கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, திருட்டு போன வாகனங்களை கண்டுபிடிக்க முடியாத நிலையே ஏற்படுகிறது.
இந்த நிலை நீங்க, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் காவல்துறை பொருத்தி உள்ளது. எனவே வாகன திருட்டு குறித்து புகார்தாரர் கூறியதும், அது தொடர்பான விசாரணையை தொடங்கினால் வாகனத்தை கண்டுபிடிக்க முடியும் என்று ஓய்வு பெற்ற போலீசார் ஒருவர் தெரிவித்தார். ஆனால், பணிச்சுமை, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போலீசார் வழக்கு பதிவினை தள்ளிப்போடுகிறார்கள். இது திருடர்களுக்கு சாதகமாக போகிறது என்றார்.
எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து ஈரோட்டில் சுற்றித்திரியும் 2 சக்கர வாகன திருட்டு கும்பலை கூண்டோடு பிடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story