திருச்சியில் கடைகளில் அதிரடி சோதனை, 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்


திருச்சியில் கடைகளில் அதிரடி சோதனை, 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி, 

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பாலித்தீன் பை, பிளாஸ்டிக் தம்ளர், குடிநீர் பாக்கெட் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகர எல்லைக்குள் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், பல இடங்களில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருச்சி பெரிய கம்மாளத்தெருவில் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

ஆணையர் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்கம் கோட்டை உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் டேவிட், திருப்பதி மற்றும் பணியாளர்கள் திருச்சி பெரிய கம்மாளத்தெருவில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். வட மாநிலத்தை சேர்ந்த படேல் என்பவர் உள்பட 3 பேர் கூட்டாக நடத்தி வந்த கடையில் சோதனை நடத்தப்பட்டபோது, அங்கு தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் மாயா என்பவரின் கடையில் சோதனை நடத்தியபோது, அங்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பண்டல் பண்டலாக இருந்தது கண்டறியப்பட்டது. 2 கடைகளில் இருந்தும் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பது கண்டறியப்பட்டால் கடை உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டது. 

Next Story