மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

திருவண்ணாமலை,

சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழி சாலை அமைக்கப்பட இருந்தது. இந்த சாலையானது சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் 8 வழி சாலை அமைக்கப்பட இருந்த மாவட்டங்களிலும் 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்தது.

இதற்கிடையில் இந்த திட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. இதனால் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகள் அபிராமன், அழகேசன், வீரபத்திரன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் 8 வழி சாலையை கொண்டு வர துடிக்கும் மத்திய, மாநில அரசை கண்டித்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும், தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் 8 வழி சாலை குறித்த மேல்முறையீடு மனுவில் மத்திய அரசின் மனுவை ஏற்று கொள்ளப்பட்டால், எதிர் மனுதாரராக திருவண்ணாமலை விவசாயிகளும் இணைய முடிவு செய்து உள்ளோம் என்றும் கூறினர்.

Next Story